மயிலாடுதுறை
மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
|மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறை அருகே அ.தி. மு.க.வினர் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை, டிச. 15-
மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறை அருகே அ.தி. மு.க.வினர் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை அருகே சித்தர்க்காட்டில் மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வைத்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை, கட்டுமான பொருட்களின் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர செயலாளர் செந்தமிழன், மாவட்ட நிர்வாகிகள் ஆத்தூர் செல்வராஜ், ஆனதாண்டவபுரம் முருகவேல், கேசிங்கன் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தெற்கு ஒன்றிய பொருளாளர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.
செம்பனார் கோவில்
செம்பனார்கோவிலில் அ.தி.மு.க. தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய அவை தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனம், கண்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கலந்து கொண்டு பேசினார். இதில் தரங்கம்பாடி பேரூர் கழக செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், சீர்காழி நகர செயலாளர் வினோத், வைத்தீஸ்வரன் கோவில் பேரூர் கழக செயலாளர் போகர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் பாரதி கலந்து கொண்டு பேசினார். மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய அவை தலைவர்கள் மனோகரன், கல்யாணசுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய துணை செயலாளர் திருமாறன் நன்றி கூறினார்.