கரூர்
கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
|கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ந்தேதி ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனையடுத்து தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றவும், தலைமை அலுவலகத்தின் சாவியை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதியில் மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணைச்செயலாளர் ஆலம் கே.தங்கராஜ், கரூர் மாநகர் தெற்கு பகுதி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.எல்.ஆர்.தங்கவேல் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.