< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
மாநில செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

தினத்தந்தி
|
26 Aug 2023 5:37 AM IST

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வில் இருந்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்துவிட்டு, ஒற்றைத் தலைமை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து, சென்னை அடுத்துள்ள வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில், கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடியது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைப்பது, கட்சியில் ஒற்றை தலைமை மீண்டும் கொண்டு வருவது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

பொதுச்செயலாளர் தேர்தல்

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மற்றொரு வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை எல்லாம் விசாரித்த தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு, தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக் கேட்ட இடைக்கால மனுக்களை எல்லாம் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தார். அதேநேரம், நோட்டீஸ் கொடுக்காமல், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரையும் நீக்கம் செய்தது தவறு என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

பொதுக்குழு நடந்தது, அதில் இயற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவை எதிர்த்து தொடரப்பட்ட பிரதான வழக்குகள் எல்லாம் தனி நீதிபதி முன்பு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையில், தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் மேல்முறையீடு செய்தனர்.

தீர்ப்பு தள்ளிவைப்பு

இந்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. அப்போது மூத்த வக்கீல்கள் பலர், இருதரப்புக்கும் ஆஜராகி பல நாட்கள் வாதிட்டனர்.

இறுதியாக இந்த வழக்கு கடந்த ஜூன் 28-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பொதுக்குழு நடத்துவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 'பொதுக்குழு நடத்தப்பட்டது செல்லும். ஆனால், அதில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு தடை விதிக்க முடியாது. மீண்டும் இதுதொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.

தடை இல்லை

தற்போது, பொதுக்குழுவியில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது. இந்த தீர்மானங்களுக்கு தடைக்கேட்ட கோரிக்கையை நிராகரிக்கிறோம். அதேபோல, அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கி பொதுக்குழுவில் இயற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க முடியாது. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை தடை கேட்கும் கோரிக்கையையும் ஏற்க முடியாது. தேர்தல் அறிவிப்புக்கு தடையும் விதிக்க முடியாது. மொத்தத்தில் தனி நீதிபதியின் தீர்ப்பில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. மேலும், பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகிவற்றை எதிர்த்து தொடரப்பட்ட பிரதான வழக்குகள் தனி நீதிபதி முன்பு நிலுவையில் உள்ளது. தற்போது, இந்த தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் இடைக்கால தடை விதித்தால், அது பிரதான வழக்குகளின் கோரிக்கையை ஏற்றதாகிவிடும். அதனால், 4 பேரின் மேல்முறையீட்டு வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்