"அதிமுக பெயர், கொடியை பயன்படுத்தவில்லை" - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விளக்கம்
|மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை என்பதால், இந்த வழக்கை தள்ளிவைக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை,
அதிமுக கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதற்கிடையில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அதிமுக பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பானது இரு நீதிபதிகள் அமர்வில் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரதான வழக்கானது, சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை என்பதால் இந்த வழக்கை தள்ளிவைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை தள்ளிவைப்பதாக இருந்தால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், தற்போது வரை அதிமுக பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறவில்லை என்று கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.