ஓ.பன்னீர் செல்வம் உங்களிடம் பேசினாரா...? அ.தி.மு.க. தலைவர்கள் தொடர்பில் உள்ளனரா...? சசிகலா பதில்
|சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் வி.கே. சசிகலாவுடன் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் சந்தித்து பேசினர்.
சென்னை:
சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வி.கே.சசிகலா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் தற்போது இருப்பவர்களை மறைந்த முதல்வர் ஜெயலிலதாவுடன் ஒப்பிட முடியாது. ஒரு கட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கு தலைவரை கட்சித் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும். அவர் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவராக இருந்தால்தான் அந்த தலைமையின் கீழ் அனைவரும் கட்டுப்பட்டு இருப்பார்கள். அ.தி.மு.கவில் தற்போது அதுபோன்ற நிலை இல்லை.
பதவிக்காக அ.தி.மு.க.வில் சிலர் எனக்கு எதிராக பேசுகின்றனர். அ.தி.மு.க. தற்போது சரியான எதிர்கட்சியாக செயல்படவில்லை. ஜெயலலிதா போன்ற தலைமை அ.தி.மு.க.வில் இல்லை. தொண்டர்கள் விரும்பும் போது நான் அ.தி.மு.க.வில் இணைவேன்.அ.தி.மு.கவில் என்னை இணைக்க முடியாது என்று சொல்வதற்கு அவர்கள் யார். அ.தி.மு.க. முக்கிய ந்ர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது.
ஒரு நாட்டின் பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வருவது சாதாரணமான விசயம் அதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. மாநிலத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் நமக்கு மேலே மத்திய அரசு உள்ளது. மாநிலத்தில் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருப்பார்கள். மாநில அரசுகள் எப்போதும் மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டும்.
தி.மு.க. அரசு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. கடந்த ஓராண்டுகளில் நிறைய குழுக்கள் மட்டுமே போட்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது தான் தி.மு.கவின் ஓராண்டு பணி.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது. அதை தவிர வேறு சில பிரச்சினைகளும் உள்ளன. தி.மு.க. அரசு ஓராண்டில் நூற்றுக்கணக்கான திட்டங்களை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக அரசும் அமைச்சர்களும்தான் சொல்கிறார்கள் மக்கள் சொல்லவில்லை. மக்கள் வந்து மனதளவில் மகிழ்ச்சியடைந்து நிறைய செய்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். அதுதான் அரசுக்கு கிடைத்த வெற்றி.
தேர்தலுக்கு முன்பாகவும் தேர்தலுக்கு பின்பு சில மாதங்களும் மத்திய அரசை குறை கூறுவது இயல்புதான். அதே நேரத்தில் வருடம் பூராவும் மத்திய அரசை திட்டிக்கொண்டிருந்தால் உங்களுடைய திட்டங்களை எப்படி நிறைவேற்றுவீர்கள். நீங்க பெரியவங்களா? நான் பெரியவங்களா என்று பேசி சண்டை போட்டுக்கொண்டிருக்காமல் நம்பி வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மத்திய அரசை அணுகி கேட்க வேண்டியதை கேட்டு சாதித்துக்கொள்ள வேண்டும். உங்கள் சண்டையால் நடுவில் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.
பேரறிவாளன் விடுதலையை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த சசிகலா, பேரறிவாளனுக்கும், நடந்த நிகழ்விற்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்கிறார்கள். இதை விசாரணை அதிகாரியே சொல்லி ஒத்துக்கொண்டிருக்கிறார்; நான் தவறுதலாக செய்துவிட்டேன் என்று. அதனால் அவரை விடுதலை செய்ததில் தவறுதலாகத் தெரியவில்லை. விடுதலைக்கு முதல்முதலாக விதைப் போட்டது ஜெயலலிதா" எனத் தெரிவித்தார்.
உங்கள் மீது மதிப்பு வைத்திருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இப்பொழுது ஓ.பன்னீர் செல்வம் உங்களிடம் பேசினாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதை நான் எப்படி இவ்வளவு பேரிடமும் சொல்ல முடியும் என்று கேட்டு விட்டு சிரித்தார் சசிகலா.
சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் வி.கே. சசிகலாவுடன் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் சந்தித்து பேசினர்.