கரூர்
அமைச்சர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்
|அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தி.மு.க. வில் இணைந்தனர். இதை ெதாடர்ந்து குளித்தலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவி தி.மு.க. வசமாக வாய்ப்பு உள்ளது.
தி.மு.க.வில் இணைந்த கவுன்சிலர்கள்
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர்களுக்காக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட விஜயவிநாயகம், இளங்கோவன், கவுரி, அறிவழகன், ராஜேஸ்வரி மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த த.மா.கா.வை சேர்ந்த சத்யா ஆகிய 6 பேர் வெற்றி பெற்றனர்.
தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சந்திரமோகன், சாந்தஷீலா, சங்கீதா, முருகேசன் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர். ஒன்றியக்குழு கவுன்சிலர்களுக்கான மொத்தமுள்ள 10 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெற்றது. அதனால் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் அ.தி.மு.க. வசமானது.
இதையடுத்து அ.தி.மு.க.வைச் சேர்ந்த விஜயவிநாயகம் ஒன்றியக்குழு தலைவராகவும், இளங்கோவன் துணைத்தலைவராகவும் இருந்து வருகின்றனர். இந்தநிலையில் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தின் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றியக்குழு கவுன்சிலர்களான அறிவழகன், ராஜேஸ்வரி ஆகியோர் நேற்று கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அதுபோல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்யா தனது ஆதரவை தி.மு.க.வுக்கு அளித்துள்ளார்.
தி.மு.க. பலம் அதிகரிப்பு
அ.தி.மு.க. ஒன்றியக் கவுன்சிலர்கள் 2 பேர் தி.மு.க.வில் இணைந்துள்ளதால் குளித்தலை ஊராட்சி ஒன்றியக்குழுவில் தி.மு.க. கவுன்சிலர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கிறது. மேலும் த.மா.கா. கட்சியை சேர்ந்த கவுன்சிலர் சத்யா தனது ஆதரவை தி.மு.க. கவுன்சிலர்களுக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளதால் தி.மு.க. கவுன்சிலர்களின் பலம் கூடுகிறது. இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது.
பரபரப்பு
இதனால் குளித்தலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது. அவ்வாறு தேர்தல் நடைபெற்றால் தி.மு.க.வைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் தலைவராகவும், துணைத்தலைவராகவும் வருவார்கள். இதில் தி.மு.க. வில் யார் தலைவராகவும் துணைத்தலைவராகவும் பொறுப்பேற்பார்கள் என்பது கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என கூறப்படுகிறது. யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்பது அறிவிப்பு வெளியான பின்னரே தெரியவரும். குளித்தலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை)நடைபெற உள்ளது. இந்த கூட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.