திருச்சி
மாநாட்டு திடலில் கட்டப்பட்டுள்ளது அ.தி.மு.க. கொடியா? புதிய கொடியா?
|மாநாட்டு திடலில் கட்டப்பட்டுள்ளது அ.தி.மு.க. கொடியா? புதிய கொடியா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் நாளை (திங்கட்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் மாநாடு நடக்கவுள்ள மைதானத்தை சுற்றி கொடிகள் நடப்பட்டுள்ளன. அந்த கொடிகள் கறுப்பு, சிகப்பு நிறத்தில், நடுவே அண்ணாதுரை மற்றும் இரட்டை இலை சின்னம் இருப்பது போல் உள்ளது.இது அ.தி.மு.க.வை ஞாபகப்படுத்தும் கொடி என்றாலும், தேர்தல் கமிஷனால் அ.தி.மு.க.வுக்கு அங்கீகரிக்கப்பட்ட கொடி அல்ல. அங்கீகரிக்கப்பட்ட கொடி என்பது, கறுப்பு, சிகப்பு நிறுத்தில், கொடியின் நடுவே அண்ணாதுரை படம் இருக்கும். மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்தும் கொடி, அ.தி.மு.க., கொடி போல் தோற்றம் இருந்தாலும், அதிகாரப்பூர்வ அ.தி.மு.க.வின் கொடி என்று கூறமுடியாது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க.வினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட கொடியை பயன்படுத்தாமல், அதேநேரம் அ.தி.மு.க. கொடி என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் இரட்டை இலை சின்னத்துடன் கூடிய கொடியை பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்பட்டது.மேலும் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினை வந்தால், நாங்கள் அ.தி.மு.க.வின் அங்கீகரிக்கப்பட்ட கொடியை பயன்படுத்தவில்லை என்று கூறுவதற்காக இப்படி செய்கிறார்கள் என்று அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டினர். ஆனால், தற்போது திருச்சி மாநாட்டு திடலில் கட்டப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் இடம்பெற்றுள்ள கொடி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலிதா இருக்கும்போதே அ.தி.மு.க.வினர் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் பயன்படுத்தி வந்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.