செங்கல்பட்டு
கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததால் அ.தி.மு.க. பிரமுகரின் வீட்டை சூறையாடிய கஞ்சா கும்பல் - ஊரப்பாக்கத்தில் பரபரப்பு
|ஊரப்பாக்கத்தில் கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் ஆத்திரத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் வீட்டை சூறையாடிய கஞ்சா கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யஞ்சேரி காந்திநகர் பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்க்கும்போது, கஞ்சா விற்கும் நபர்கள் போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விடுகின்றனர்.
தினந்தோறும் இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருப்பதால், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான பல இளைஞர்கள் அப்பகுதியில் குடியிருக்கும் பெண்களை கேலி கிண்டல் செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கஞ்சா விற்பனை குறித்து ஊரப்பாக்கம் ஊராட்சி 15-வது வார்டு அ.தி.மு.க. கிளை செயலாளர் ஏகாம்பரநாதர் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார். இதனை அறிந்து கொண்ட கஞ்சா விற்பனையில் ஈடுபடும் 10-க்கும் மேற்பட்ட கும்பல் ஏகாம்பரநாதர் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்று அவரது வீட்டை கற்கள் வீசி ஜன்னல், கண்ணாடிகளை அடித்து நொறுக்கி வீட்டை சூறையாடியுள்ளனர்.
வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை நொறுக்கி சென்று உள்ளனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அய்யஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.