< Back
மாநில செய்திகள்
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படுகின்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் - எடப்பாடி பழனிசாமி
மாநில செய்திகள்

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படுகின்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் - எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
10 Oct 2022 4:02 PM IST

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படுகின்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. வலுவாக இருப்பதற்கு காரணமே மக்களுடைய பெரும் ஆதரவு தான். அதனால் இன்றைக்கு அ.தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியவில்லை. எத்தனையோ பேர் இந்த கட்சியை உடைக்க பார்த்தார்கள். முடக்கப்பார்த்தார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எத்தனையோ அவதாரம் எடுத்து அ.தி.மு.க.வை அழிக்கப்பார்த்தார். அத்தனை அவதாரத்தையும் தவிடு பொடியாக்கிய கட்சி அ.தி.மு.க. தான். மக்கள்தான் அ.தி.மு.க.வை இயக்குகிறார்கள்.

அ.தி.மு.கவை பொறுத்தவரைக்கும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சி. இதற்காக எங்களது தொண்டர்கள், நிர்வாகிகள் உழைப்பார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் வாய்ப்பு இருப்பதாக நாட்டு மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

மக்களுடைய எண்ணமெல்லாம் இந்த தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்பதுதான். யாரை கேட்டாலும் இப்படித்தான் சொல்கிறார்கள். தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப கிராமம் முதல் நகரம் வரை வசிக்கும் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 இடங்களில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படுகின்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின் நீங்கள் சொன்ன எந்த திட்டமாவது நிறைவேற்றி இருக்கிறீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தை நிறைவேற்றி கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு தான் அடிக்கல் நாட்டுகிறார்கள் என கூறினார்.

மேலும் செய்திகள்