கரூர்
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அ.தி.மு.க. வார்டு செயலாளர் அரிவாளால் வெட்டிக்கொலை
|கரூரில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அ.தி.மு.க. வார்டு செயலாளர் அரிவாளால் வெட்டிக்கொலை ெசய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அ.தி.மு.க. வார்டு செயலாளர்
கரூர் மாநகராட்சி ராயனூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 49). இவர் அ.தி.மு.க.வில் கரூர் மாநகர 32-வது வார்டு செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திருமாநிலையூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வடிவேலை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். பின்னர் அாிவாளால் வடிவேலின் கழுத்து, தோள்பட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து 3 பேரும் தப்பி சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் வடிவேல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
பலி
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் வடிவேலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேல் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
கொடுக்கல், வாங்கல் தகராறு
விசாரணையில், வடிவேல் தனது நண்பர் கரூர் முத்துராஜபுரத்தை சேர்ந்த மகாதேவன் (32) என்பவரிடம் ரூ.5 ஆயிரம் கேட்பதற்காக போன் செய்துள்ளார். ஆனால் மகாதேவன் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வடிவேல் கரூர் வந்து, அப்பகுதியில் டீக்கடை ஒன்றில் நின்று கொண்டிருந்த மகாதேவனிடம், `ஏன் போனை எடுக்கவில்லை' என்று கூறி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மகாதேவன் தனது உறவினர் ெபாய்கை புதூைர சோ்ந்த பாலா மற்றும் சேகர் ஆகிேயாருடன் சேர்ந்து திருமாநிலையூர் பகுதியில் மறைந்திருந்து வடிவேலை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, 3 பேரையும் அடையாளம் கண்டு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.