கடலூர்
கடலூர், நெய்வேலியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
|மின் கட்டண உயர்வை கண்டித்து கடலூர், நெய்வேலியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர்கள் எம்.சி.சம்பத், சொரத்தூர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.
கடலூர்:
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டுகொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. அறிவித்தது. அதன்படி கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார்.
எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தாமோதரன், மாநில மீனவர் பிரிவு இணைச் செயலாளர் தங்கமணி, மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கார்த்திகேயன், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் வரவேற்றார்.
கேலிக்கூத்து
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், 40 சதவீதம் அளவிற்கு மின்கட்டணத்தை அடுத்த மாதத்தில் இருந்து உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நிதி அமைச்சர், நிதி பற்றாக்குறையாக உள்ளது. அதனால் தான் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று கூறுகிறார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்கப்பட்ட அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்திவிட்ட இந்த அரசு இன்னும் நிதி பற்றாக்குறை என்று கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.
கடலூர் மக்களுக்கு நன்மை தராத ஒரு புதிய இடத்தில் தான் பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும் என்று தி.மு.க. ஏன் பிடிவாதம் பிடிக்கிறது என்று தெரியவில்லை. கடலூர் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்தத் திட்டம் தொடர்ந்தால் மக்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க.வை மக்கள் ஆட்சிக்கட்டிலில் இருந்து தூக்கி எறியும் காலம் விரைவில் வரும் என்றார்.
இதில் மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், துணை செயலாளர் தெய்வ.பக்கிரி, இணை செயலாளர் கவுரி பாண்டியன், துணை செயலாளர் மணிமேகலை தஷ்ணா, முன்னாள் நகர மன்ற தலைவர் சுப்பிரமணியன், கடலூர் மாநகர பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், மாதவன், கந்தன், நகர செயலாளர்கள் தாடி முருகன், காசிநாதன், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா மருத்துவர் அணி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.அழகானந்தம் நன்றி கூறினார்.
நெய்வேலி
கடலூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன், தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சூரியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கடலூர் மேற்கு வினோத், குறிஞ்சிப்பாடி கிழக்கு பாஷியம், வடலூர் நகர செயலாளர் பாபு, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயலாளர் ஆனந்த பாஸ்கர், வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் வக்கீல் ராஜசேகரன், மாவட்ட அவைத்தலைவர் முத்துலிங்கம், மாவட்ட பொருளாளர் தேவநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாண்டுரங்கன், சத்யஅன்பு, மாவட்ட பேரவை சுப்ரமணியன், நெய்வேலி அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க தலைவர் வெற்றிவேல், பொருளாளர் தேவானந்தன், அலுவலக செயலாளர் ஜோதி, முன்னாள் தலைவர் அபு, உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் பேசுகையில், தி.மு.க. மின் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 234 தொகுதிகளிலும் மக்களிடம் எதிர்ப்பு இல்லை. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க தொடங்கி விட்டார்கள். எனவே தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமைப்போம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் என்றார்.