சென்னையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
|சென்னையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை,
அ.தி.மு.க. தென்சென்னை மாவட்ட செயலாளராக இருப்பவர் சத்யா என்கிற சத்யநாராயணன். சென்னை தியாகராயநகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அப்போது அவர், தனது வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 78 லட்சம் என்று தெரிவித்திருந்தார். சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்தாக்சன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சத்யாவின் சொத்து மதிப்பை கேட்டிருந்தார். இதில் அவருடைய சொத்து மதிப்பு பல கோடி ரூபாய் அதிகரித்திருந்தது.
எனவே சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது ஆரம்பக்கட்ட விசாரணையை 2 மாதங்களில் முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடரலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார்.
ரூ.2 கோடி 64 லட்சம் சொத்துக்குவிப்பு
இதையடுத்து சத்யா, அவரது மனைவி மற்றும் மகள் சொத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சேகரித்து, அலசி ஆராய்ந்தனர்.
இதில் ரூ.2 கோடியே 64 லட்சம் சொத்துகள் குவித்திருப்பது தெரிய வந்தது.
22 இடங்களில் சோதனை
சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜாய் தயாள் நேற்றுமுன்தினம் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் சத்யா மற்றும் அவருடைய தொடர்புடைய 22 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனை வேட்டையில் இறங்கினார்கள்.
சென்னை வடபழனி நெற்குன்றம் பாதை 2-வது தெருவில் உள்ள சத்யாவின் வீட்டுக்கு நேற்று காலை 6.30 மணியளவில் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தள்ளுமுள்ளு
இந்த நிலையில் சத்யாவின் வீட்டில் சோதனை நடைபெறும் தகவல் அறிந்து அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் திரண்டனர். அவரது ஆதரவாளர்கள் சிலர் போலீசாருடன் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில், லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்து வீட்டின் அருகே இருக்கைகள் போட்டு அமர்ந்தனர். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி, ரமணா உள்பட நிர்வாகிகளும் வந்து சென்றனர்.
சென்னை வடபழனி திருநகர், பெருமாள் கோவில் தெரு, தியாகராயநகர் பாரதிநகர், கோடம்பாக்கம் பரமேஸ்வரி காலனி, சாலிகிராமம் உள்பட்ட பகுதிகளில் சத்யாவுக்கு சொந்தமான இடங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை வளையத்துக்குள் வந்தது.
அசைக்க முடியாது
லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து சத்யா கூறுகையில், '16 சதவீதம் என்னுடைய சொத்து உயர்ந்துள்ளது என்று கூறியிருப்பது குறித்து எனது 'ஆடிட்டர்' மூலம் தெளிவுப்படுத்துவேன். என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். லஞ்ச ஒழிப்புத்துறையினர் சொல்வார்கள்.
தற்போது தி.மு.க. அரசு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை யாராலும் அசைக்கவோ, வீழ்த்தவோ முடியாது' என்று கூறினார்.
திருவள்ளூர், கோவை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள சத்யாவின் நெருங்கிய நண்பர் தொழில் அதிபர் திலீப்குமார் என்பவரது நிறுவனத்திலும் சோதனை நடந்தது. கோவையில் சத்யாவின் மகள் கவிதா, ஹாட் சிப்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்திலும் சோதனை நடந்தது.
மற்றொரு மாவட்டச் செயலாளர் வீட்டிலும்...
இதேபோல் சத்யாவின் நெருங்கிய நண்பரும், அ.தி.மு.க. வடசென்னை மாவட்ட செயலாளருமான ஆர்.எஸ்.ராஜேஷ் வீடு சென்னை தண்டையார்பேட்டை சேமி அம்மன் கோயில் தெருவில் உள்ளது. இவரது வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் 6 பேர், காலையில் இருந்து மாலை வரை 10 மணி நேரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் ஏராளமான கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றப்பத்திரிகை
இந்த சோதனைக்கு மத்தியில், சத்யா மீது பதிவு செய்யப்பட்டுள்ள 25 பக்கங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது.
அதில், சத்யா மற்றும் அவருடைய மனைவி மற்றும் மகள் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி, தடா, காஞ்சீபுரம் மாவட்டம் செம்மஞ்சேரி, திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற இடங்களில் இடங்கள் வாங்கி இருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சைக்கிள் கடை
ஆரம்பத்தில் சத்யா, வடபழனி ஆண்டவர் நகர் 3-வது தெருவில் சைக்கிள் கடை நடத்தி வந்தது, பால் விற்பனை செய்தது, வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவில் சி.டி. விற்பனை கடை நடத்தி வந்தது போன்ற தகவலும் அதில் இடம் பெற்றுள்ளன.
இவர், விழுப்புரம் மற்றும் வடபழனியில் டாஸ்மாக் 'பார்' நடத்தி வந்த தகவலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.