தஞ்சாவூர்
பட்டுக்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
|நாடியம்மன் கோவில் குளம் தூர்வாரப்படாததை கண்டித்து பட்டுக்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பட்டுக்கோட்டை:
நாடியம்மன் கோவில் குளம் தூர்வாரப்படாததை கண்டித்து பட்டுக்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
பட்டுக்கோட்டை நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா தலைமை தாங்கினார்.நகராட்சி ஆணையர் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்டு உறுப்பினர்கள் பேசியதாவது:- ஜவகர் பாபு (அ.தி.மு.க.) பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் குளம் கடந்த 2 ஆண்டுகளாக தூர்வாரும் பணி நடைபெறாமல் உள்ளது. மேலும் நகரில் தெருவிளக்கு பராமரிப்பு சரி இல்லை.
இதைக் கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சிறிதுநேரத்தில் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
துப்புரவு பணி மந்தம்
மகாலெட்சுமி (தி.மு.க.):- எனது வார்டில் துப்புரவு பணிகள் சரிவர நடைபெறுவதில்லை. குடிநீர் தொட்டியில் தண்ணீர் வெளியேறி சாக்கடையில் கலக்கிறது.
குமார் (தி.மு.க.):- மாதந்தோறும் நகர்மன்ற கூட்டத்தை நடத்த வேண்டும்.
ரகுராமன் (தி.மு.க):- பண்ணைவயல் ரோடு, சிவக்கொல்லை ஆகிய பகுதிகளில் துப்புரவு பணி மந்தமாக உள்ளது. குப்பைகள் ஆங்காங்கே தேங்கியுள்ளது.
சுற்றித்திரியும் மாடுகள்
நாடிமுத்து (த.மா.கா.):- முடி பூண்டார் நகர், வ.உ.சி. நகர் சாலைகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. இவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பிரபாகனி (அ.தி.மு.க.):- எனது வார்டில் பள்ளிக்கூடம் அருகில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்தந்த வார்டுகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும் போது கவுன்சிலர்களை ெதரிவித்து செய்ய வேண்டும்.
கட்டுப்பாட்டு அறை
ரவிக்குமார் (தி.மு.க.):- சாமியார் மடம், பெருமாள் கோவில் தெரு ஆற்றுப்பாலம் ஆகிய இடங்களில் மின்விளக்குகள் பொருத்தவேண்டும்.
குமணன் (அ.தி.மு.க.):- சமுதாயக்கூடம் மற்றும் பணிகள் நடந்தால் கவுன்சிலருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
சிவக்குமார் (வி.சி.):- நகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்க வேண்டும்.
ரகுராமன் (தி.மு.க.):- தி.மு.க. உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஒட்டுமொத்தமாக கூட்டத்தை புறக்கணிப்போம்
பழுதடைந்த சாலைகள்
நளினி சம்பத் (அ.தி.மு.க.):- பல இடங்களில் சாலைகள் பழுது அடைந்துள்ளன. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர். உறுப்பினர்களின் கேள்விக்கு ஆணையர் குமார் பதில் அளித்து பேசினார்.