கரூர்
அ.தி.மு.க. ஆட்சியில் 37 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது- அமைச்சர் வி.செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
|மின்சார வாரியம் ஆண்டுக்கு ரூ.16,500 கோடி வட்டி செலுத்துவதாகவும், அ.தி.மு.க. ஆட்சியில் 37 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி குற்றம் சாட்டினார்.
ஸ்மார்ட் மீட்டர்
கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தவறான கருத்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நிச்சயமாக தமிழகத்தில் இருக்க கூடிய வீடுகளுக்கும், குடிசைகளுக்கும் மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்களுக்கும் எந்தவிதமான ஸ்மார்ட் மீட்டர் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. வீடுகள் மற்றும் குடிசைகளுக்கான மொத்த மின் நுகர்வோர்கள் 2 கோடியே 37 லட்சம் பேர். இதில் 1 கோடி மின்நுகர்வோர்களுக்கு எந்தவிதமான கட்டண உயர்வும் இல்லாமல், மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.
101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தக்கூடிய மின்நுகர்வோர்கள் 63 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட கட்டணத்தில் 2 மாதங்களுக்கு ரூ.55 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.1 என்பதை விட குறைவு.
மின்மிகை மாநிலம்
மின்வாரியத்தை பொறுத்தவரை பொதுமக்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் கட்டண மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த நம்முடைய மின்தேவையில் 3-ல் 1 பங்கு மட்டும்தான் மின்வாரியம் உற்பத்தி செய்கிறது. 2 பங்கு மின்சாரம் வெளிச்சந்தையில் தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.
நம்முடைய தேவையை நாமே பூர்த்தி செய்யாமல் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டு, மின்மிகை மாநிலம் என பொய்யான கருத்தையே மக்களிடத்தில் எடுத்து செல்கின்றனர். அப்படி மின்மிகை மாநிலம் என்றால் 4½ லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு பெற பதிவு செய்து 20 ஆண்டுகளாக காத்திருந்தனர். அதில் 1 லட்சம் விவசாயிகளுக்கு தற்போது மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டில் மின் இணைப்பு வழங்குவதற்கான உத்தரவுகள் பிறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
ரூ.16,500 கோடி வட்டி
தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரை கடந்த ஆட்சி காலத்தில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேட்டின் காரணமாக இழுத்து மூடக்கூடிய நிலை இருந்தது. மின்சார வாரியம் ஆண்டுக்கு ரூ.16 ஆயிரத்து 500 கோடி வட்டி கட்டக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு எந்த அரசாங்கம் காரணம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 37 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.