கள்ளக்குறிச்சி
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமரகுரு மீது 18 போலீஸ் நிலையங்களில் தி.மு.க.வினர் புகார்
|கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து ஆபாசமாக பேசியதாக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 18 போலீஸ் நிலையங்களில் தி.மு.க.வினர் புகார் கொடுத்தனர்.
பொதுக்கூட்டம்
அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளக்க பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து ஆபாசமாக பேசினார். இது தி.மு.க.வினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரகுரு மீது வழக்குப்பதிவு
இதையடுத்து குமரகுரு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் குமரகுரு மீது பொதுவெளியில் ஆபாசமாக திட்டுதல், பொது அமைதிக்கு களங்கம் விளைவித்தல், அவமதிப்பு செய்தல், அரசுக்கு எதிராக பேசுதல் என 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் தி.மு.க. நகர செயலாளர் சுப்ராயலு தலைமையில் குமரகுருவை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர துணை செயலாளர்கள் அப்துல்ரசாக், நீதிஅன்பு, உமாவெங்கடேசன், நகர அவைத் தலைவர் அப்துல்கலீல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் குமரகுரு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
மேலும் 17 போலீஸ் நிலையங்களில் புகார்
இதேபோல் குமரகுரு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மேலும் 17 போலீஸ் நிலையங்களில் தி.மு.க.வினர் புகார் கொடுத்தனர்.
அதன்படி ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் தி.மு.க. பிரமுகர் செல்வகுமார், பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், வடக்கு ஒன்றிய செயலாளர் துரைமுருகன், சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்புமணிமாறன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் புகார் கொடுத்தனர்.
அதேபோல் திருக்கோவிலூா் போலீஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் நகர செயலாளர் வக்கீல் ஜெயகணேஷ், மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்தில் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக், வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சிவமலை, சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை ஆகியோர் புகார் கொடுத்தனர்.
உளுந்தூர்பேட்டை
கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ், தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் நகர செயலாளர் மலையரசன், வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட துணை செயலாளர் புவனேஸ்வரி பெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் நகர செயலாளர் டேனியல்ராஜ், ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர்கள் வசந்தவேல், முருகன் ஆகியோர் புகார் கொடுத்தனர்.
அதேபோல் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர் ராஜவேல், கரியாலூர் போலீஸ் நிலையத்தில் நகர செயலாளர் ஜெயவேல், கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர்கள் வேங்கோடு கிருஷ்ணன், கரியாலூர் சின்னத்தம்பி, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான சந்திரசேகரன் ஆகியோர் புகாா் கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு தனது முகநூல் பக்கத்தில், அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நான் நீட் தேர்வு பற்றி பேசினேன். அப்போது வாய் தவறி தவறுதலாக ஒரு வார்த்தையை சொல்லி விட்டேன். உள்நோக்கம் இல்லாமல் என்னை அறியாமல் பிறர் மனம் புண்படும் வகையில் பேசிய அந்த வார்த்தைக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.