அ.தி.மு.க. கூட்டணியில் இணைய தே.மு.தி.க.வினர் விருப்பம்
|நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 79 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டணி குறித்து முடிவெடுக்க அனைத்து அதிகாரங்களையும் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு வழங்கி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு, அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விஜயகாந்துக்கு மாவட்டம் தோறும் சிலை நிறுவ மற்றும் விஜயகாந்த் நினைவிடத்தில் தினந்தோறும் அன்னதானம் உதவிகள் செய்ய அறக்கட்டளை உருவாக்கியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன் விஜயகாந்த் புகழை எடுத்துரைக்கும் வகையில் ஊர்தோறும் கூட்டங்கள் நடத்த கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டும் என்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் முறையீடு செய்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலையும் கருத்தில் கொண்டு அ.தி.மு.க.வுடன் செல்வதே நல்லது என மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகுதிப் பங்கீட்டில் எந்த சமரசமும் இல்லாமல் நமக்கு தேவையானதை கேட்டுப் பெற வேண்டும் என்றும் நம்முடைய விருப்பத்தை, வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி வைப்பதே நல்லது என தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் பிரேமலதாவிடம் வலியுறுத்தி உள்ளனர்.