< Back
மாநில செய்திகள்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தை போல  அ.தி.மு.க. சுயசிந்தனையோடு செயல்படவில்லை - முத்தரசன்

முத்தரசன் 

மயிலாடுதுறை
மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தை போல அ.தி.மு.க. சுயசிந்தனையோடு செயல்படவில்லை - முத்தரசன்

தினத்தந்தி
|
25 Jun 2022 12:28 PM GMT

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தை போல அ.தி.மு.க. சுய சிந்தனையோடு செயல்படவில்லை என முத்தரசன் கூறினார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தை போல அ.தி.மு.க. சுய சிந்தனையோடு செயல்படவில்லை என முத்தரசன் கூறினார்.

பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது மாவட்ட மாநாடு மற்றும் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

தேசியக்குழு உறுப்பினர் பழனிசாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூரில் பேரணி

வருகிற ஆகஸ்டு 9-ந் தேதி அன்று 'மக்கள் விரோத, ஜனநாயக விரோத மத்திய அரசே வெளியேறு' என்ற கோஷத்தை முன்னிறுத்தி திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பேரணி நடத்த உள்ளோம்.

மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பங்கு தொகை, பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக வழங்கவில்லை. அப்படிப்பட்ட சூழலிலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.

திரும்பப்பெற வேண்டும்

குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களை வழங்க வேண்டும். உரத்தட்டுப்பாட்டை போக்க கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தட்டுப்பாடின்றி உரம் வழங்க வேண்டும்.

பிரதமர் மோடி ஜனநாயக பூர்வமாக எதையும் செய்வதில்லை. வேலை இல்லா திண்டாட்டத்தை பயன்படுத்தி அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்கிறார்கள். அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததால், நாடே அக்னியாகி கொண்டு இருக்கிறது. எனவே இந்த திட்டத்தை திரும்பப்பெற வேண்டும். பழைய முறைப்படி ராணுவத்துக்கு ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.

சுயசிந்தனை

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க. சுயசிந்தனையோடும், புத்தியோடும் செயல்பட்டது. அதேபோல தற்போது அ.தி.மு.க. சுய சிந்தனையோடு செயல்படவில்லை. அ.தி.மு.க.வை வேறு யாரோ இயக்குகிறார்கள்.

இயக்குகிறவர்கள் எடுக்கிற முடிவுக்கு ஏற்ப அ.தி.மு.க. இருக்கும். பா.ஜனதா கூட்டணி திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். சர்வாதிகார போக்கை மாற்ற வேண்டும் என்பதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கக்கூடியவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து யஷ்வந்த் சின்காவை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்