அ.தி.மு.க. தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் சபாநாயகர் அப்பாவு ஆஜர்
|அ.தி.மு.க.தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
சென்னை,
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் திமுகவிற்கு வர தயாராக இருந்ததாகவும் ஆனால் மு.க.ஸ்டாலின் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவை சேர்ந்த பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். சென்னை ஐகோர்ட்டு, வழக்கு தொடர அனுமதி அளித்ததையடுத்து, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கை பாபு முருகவேல் தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பாவு தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, சம்மன் தங்களுக்கு வரவில்லை என்றும், வந்திருந்தால் கண்டிப்பாக அப்பாவு ஆஜராகி இருப்பார் என்றும் தெரிவித்தார். மேலும், சம்மனை நிராகரிக்கவில்லை என்றும், கோர்ட்டு கூறும் தேதியில் அப்பாவு ஆஜராவார் என்றும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை வருகிற 13-ந் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், இந்த தேதியில் அப்பாவு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார். அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோர்ட்டு ஏற்கெனவே கூறியபடி சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜரானார். எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் மீதான மனுக்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் சபாநாயகர் அப்பாவு ஆஜராகியுள்ளார். வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.