< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டி.ஜி.பி.யிடம் சி.வி.சண்முகம் மனு
மாநில செய்திகள்

அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டி.ஜி.பி.யிடம் சி.வி.சண்முகம் மனு

தினத்தந்தி
|
27 July 2022 3:53 AM IST

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்து ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தியது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி டி.ஜி.பி.யிடம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புதிய புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

சென்னை,

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில், தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு புதிய புகார் மனு ஒன்று நேற்று கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பெரும் கலவரம்

கடந்த 11-ந் தேதி அன்று ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவது தொடர்பாக பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் இந்த கலவரத்தின்போது அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் மற்றும் இருப்பு தொகை உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் திருடிச்சென்று விட்டதாக கடந்த சனிக்கிழமை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். இது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன்.

நடவடிக்கை எடுக்கவில்லை

ஆனால் இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பவம் நடந்த இடமான அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்து இதுவரை எவ்வித விசாரணையும் நடத்தவில்லை. கைரேகை பதிவு செய்யவில்லை. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யவில்லை.

கலவரத்தில் காயம் அடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 15 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் கலவரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் இருந்தே போலீசாரின் அலட்சிய போக்கு தெரிகிறது.

சி.பி.ஐ. விசாரணை

இதனால் உடனடியாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் மற்றும் அங்கு நடந்த திருட்டு தொடர்பான வழக்கை சி.பி.ஐ. அல்லது பிற புலனாய்வு ஏஜென்சிகளுக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்