< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர், மகள் மீது வழக்குப்பதிவு
சேலம்
மாநில செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர், மகள் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
8 Jan 2023 1:00 AM IST

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.41 லட்சம் மோசடி செய்த புகாரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.41 லட்சம் மோசடி செய்த புகாரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோரைப்பாய் வியாபாரி

சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் முனுசாமி (வயது 77). இவர், மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடாவிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோரைப்பாய் வியாபாரம் செய்து வரும் எனக்கு கடந்த 2015-ம் ஆண்டு சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த ராஜகாளிப்பட்டி அருகே நம்மம்பட்டி பகுதியை சேர்ந்த அப்போதைய அ.தி.மு.க. ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சுப்பிரமணியனை அறிமுகம் செய்து வைத்தார்.

அவர் 2011 முதல் 2016 வரை அமைச்சராக இருந்தார். அப்போது, தான் தயாரிக்கும் கோரைபாய்களை ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி விடுதிகளுக்கு வழங்கும் டெண்டரை பெற்று சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை மற்றும் வெள்ளிமலை பள்ளிகளுக்கு வழங்கி வந்தேன்.

ரூ.41½ லட்சம் மோசடி

மேலும், அமைச்சர் சுப்பிரமணியன், ஆதி திராவிடர் நலத்துறையில் சமையலர் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாகவும், அதற்கு உரிய நபர்கள் இருந்தால் அவர்களுக்கு சமையல் வேலை வாங்கி கொடுப்பதாகவும் கூறினார். இதனை நம்பி 20 நபர்களிடம் இருந்து ரூ.65 லட்சம் வாங்கி அதை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் லாவண்யா ஆகியோரிடம் கொடுத்தேன். ஆனால் யாருக்கும் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவரிடம் கூறினேன். இதையடுத்து அமைச்சர் தரப்பில் இருந்து ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுக்கப்பட்டது.மீதி தொகையான ரூ.41 லட்சத்து 50 ஆயிரம் தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் நஜ்முல்ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில், உதவி கமிஷனர் கந்தசாமி விசாரணை நடத்தி முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் லாவண்யா மீது ஊழல் தடுப்பு உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்