தூத்துக்குடி
அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
|புதியம்புத்தூர், நாலாட்டின்புத்தூரில் நடந்த அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதியம்புத்தூரில் நடந்தது. கூட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மோகன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலுடன் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சரிபார்த்து பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பில் நாலாட்டின்புத்தூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது தேர்தல் பணிகள் குறித்தும், செயல்படும் விதம் குறித்தும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.விடம் வழங்கினர். பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கோவில்பட்டி ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யலுராஜன், கிளை செயலாளர்கள் சக்கையா, அய்யாசாமி, கண்ணன், முருகேசன், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.