அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மீண்டும் உருவாகி விடும் -கே.எஸ்.அழகிரி பேச்சு
|2 தனிமனிதர்களுக்கு இடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாகவே அ.தி.மு.க.-பா.ஜ.க. பிளவுபட்டுள்ளது என்றும், மீண்டும் கூட்டணி உருவாகி விடும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கருத்தரங்குக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் டி.ஏ.நவீன் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அகில இந்திய காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கருத்துரையாற்றினர். தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
நேரு கொண்டு வந்தார்
கருத்தரங்கில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
ராகுல்காந்தி சாதிவாரி கணக்கெடுப்பை மிக முக்கிய பிரச்சினையாக கருதி நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். இந்தியாவில் இடஒதுக்கீடு வந்ததற்கு 2 பேர் காரணம். அதற்கு மேல் ஒருவர் காரணம். அந்த 2 பேர் காமராஜரும், பெரியாரும் தான். பெரியார், காமராஜரை சந்தித்து அரசியல் அமைப்பு சட்டத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு இல்லை.
எனவே, அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்துங்கள் என்று கூறினார். இதைத் தொடர்ந்து காமராஜர், நேருவை சந்தித்து அரசியல் சட்டத்தை திருத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்து கூறினார். அதன் பின்னர் அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தத்தை நேரு கொண்டு வந்தார். இன்றைய இடஒதுக்கீட்டிற்கு அவர்கள் தான் காரணம்.
கூட்டணி உருவாகிவிடும்
இன்றைக்கு அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பிரிந்து விட்டார்களே என்று பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் அதை பிரிவினையாக ஒத்து கொள்ளவில்லை. அவர்கள் 2 தனிமனிதர்களுக்கு இடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறார்கள். நாளைக்கே மீண்டும் கூட்டணி உருவாகிவிடும்.
பிளவு என்பது கொள்கை ரீதியாக இருக்க வேண்டும். எங்களுக்கு பா.ஜ.க. கொள்கை பிடிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். கொள்கை பிடிக்கவில்லை. அவர்கள் கொண்டு வருகிற சமூக நீதிக்கு எதிரான தத்துவங்கள் எங்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி அ.தி.மு.க. வெளியே வந்து இருந்தால் அது போற்றுதலுக்குரிய ஒரு விஷயமே ஒழிய தனி மனித விரோதம் நீடிக்காது. அது சரியும் அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் துரைசந்திர சேகர் எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் தளபதி எஸ்.பாஸ்கர், ஆர்.டி.ஐ. பிரிவு மாநில துணைத்தலைவர் மயிலை தரணி, ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் துறைமுகம் ரவிராஜ் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.