அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஒருபோதும் முறியாது - திருமாவளவன்
|அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஒரு போதும் முறியாது என திருமாவளவன் எம்.பி. கூறினார்.
பேட்டி
தஞ்சையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்ட மசோதாவை இந்த சிறப்பு கூட்ட தொடரில் பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தியது. அனைத்து கட்சியினரும் ஒரு மனதாக ஆதரித்து நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் இது உடனடியாக நடைமுறைக்கு வராது என்பது தான் கவலைக்குரியதாகும்.
ஒருபோதும் முறியாது
அ.தி.மு.க., பா.ஜ.க. இடையேயான பிரச்சினை தற்காலிக அரசியல் நாடகம். அவர்கள் கூட்டணியை ஒரு போதும் முறித்து கொள்ள மாட்டார்கள். அ.தி.மு.க.வை நம்பி பா.ஜ.க. உள்ளது. பா.ஜ.க.வை நம்பி அ.தி.மு.க. உள்ளது. இந்த 2 கட்சிகளும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை.
அண்ணாமலை கவன ஈர்ப்புக்காகவே ஆதாரம் இல்லாத ஒன்றை பேசுகிறார். அண்ணாவை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுகிறார். இவை அனைத்தும் அரசியலில் தன்னைப்பற்றி ஒவ்வொரு நாளும் விவாதிக்க வேண்டும் என்று உளவியல் சிக்கல் அண்ணாமலைக்கு இருக்கிறது.
அ.தி.மு.க. வாக்கு வங்கியை இழக்கும்
ஆகவே மனதில் பட்டதை எல்லாம் பேசுகிறார். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க.வில் ஜெயகுமார் போன்றவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து இருக்கிறார்கள். அவ்வளவு தான். இதனால் கூட்டணி முறிந்து விடும் என யாரும் எதிர்பார்க்க தேவையில்லை.
அ.தி.மு.க.வானது பா.ஜ.க. வை சுமக்காமல் தனித்து நின்றாலே அவர்களுக்கு எந்த பாதிப்பும், பின்னடைவும் ஏற்படாது. பா.ஜ.க.வை சுமக்க, சுமக்க அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை மேலும், மேலும் இழக்க நேரிடும். யார் சொன்னாலும் பா.ஜ.க.வை தூக்கி சுமப்பதே தங்களின் கடமை என அ.தி.மு.க.வினர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். எனவே இந்த இடைக்கால மோதல், முரண்கள், தமிழக அரசியலிலும், கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது.
நீட் தேர்வு ரத்து
காவிரி பிரச்சினையில் கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு எதிராக இல்லை என காட்டிக்கொள்ளுகிறது. இந்த இரட்டை போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் வழிகாட்டியுள்ளபடி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். அகில இந்திய அளவில் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.