< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் இடையே சண்டை மூட்டி விட முயற்சி-டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
அரியலூர்
மாநில செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் இடையே சண்டை மூட்டி விட முயற்சி-டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
14 July 2022 11:54 PM IST

அ.தி.மு.க. தற்போது சாதி ரீதியாக பிளவுபட்டுள்ளதாகவும், நிர்வாகிகள்-தொண்டர்கள் இடையே சண்டை மூட்டி விட முயற்சி நடைபெறுவதாகவும் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டினார்.

செயல்வீரர்கள் கூட்டம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலர் துரை.மணிவேல் தலைமை தாங்கினார். இதில், கட்சியின் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது அ.தி.மு.க.வில் நடைபெறக்கூடிய அனைத்து செயல்களையும் அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் பேசி உள்ளதாக 'ஆடியோ' ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால், அவர் யாருக்கோ பயந்து கொண்டு அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இதை நான் பேசியபோது, என் மீது வழக்கு தொடுக்கப்படும் என ஜெயக்குமார் கூறியுள்ளார். அந்த வழக்கை சந்திக்க தயார். அப்போது ஆடியோவில் உள்ள உண்மை தன்மை ஆராயப்பட்டு அ.தி.மு.க.வில் நடக்கக்கூடிய அனைத்து சம்பவங்களும் தொண்டர்களுக்கு தெரியவரும்.

சாதி ரீதியாக பிளவு

அ.தி.மு.க. பொதுக்குழு எவ்வாறு நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும், விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வில் முக்கிய தலைமை நிர்வாகிகள் குறித்து பொன்னையன் ஆடியோவில் பேசியுள்ளதை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள். அனைத்தும் உண்மை. தமிழகத்தின் ராஜபக்சேவாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். ராஜபக்சேவிற்கு ஏற்பட்ட நிலைமை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும். அ.தி.மு.க. தொண்டர்களால் அவர் விரட்டியடிக்கப்படுவார்.

தற்போது சாதி ரீதியாக அ.தி.மு.க. பிளவுபட்டுள்ளது. குறிப்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சாதி ரீதியாக பிரித்து அவர்களுக்குள் சண்டையே மூட்டி விட எடப்பாடி தரப்பினர் தயாராகி உள்ளனர். துரோகம் செய்தவர்கள் துரோகத்தால் அழிந்து போவார்கள். விரைவில் அ.தி.மு.க. துரோகிகளிடமிருந்து மீட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அ.ம.மு.க. துணை செயலர் ரங்கசாமி, பெரம்பலூர் மாவட்ட செயலர் கார்த்திக்கேயன், தா.பழூர் ஒன்றிய செயலர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்