மதுரை
அ.தி.மு.க. மாநில மாநாட்டை முன்னிட்டு ஒரு லட்சம் பேருக்கு மரக்கன்று
|அ.தி.மு.க. மாநில மாநாட்டை முன்னிட்டு ஒரு லட்சம் பேருக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியை ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க. மாநில மாநாட்டை முன்னிட்டு ஒரு லட்சம் பேருக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியை ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
ஜெயலலிதா பேரவை
மதுரை ரிங்ரோட்டில் அ.தி.மு.க. மாநில மாநாடு வருகிற 20-ந் தேதி நடக்கிறது. அதற்கு வீர வரலாற்றில், பொன்விழா எழுச்சி மாநாடு என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்னாள் முதல்-அமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பொதுமக்களும் அதிக அளவில் கலந்து கொள்ளும் வகையில் ஜெயலலிதா பேரவையின் சார்பில், மாநாடு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகரை பசுமையாக்கிட ஒரு லட்சம் பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. அதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.சரவணன், தமிழரசன், மாணிக்கம், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தமிழழகன், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச்செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதில் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்பட அனைவருக்கும் ஆர்.பி.உதயகுமார் மரக்கன்றுகளை வழங்கி பேசினார்.
பசுமை பூமி
அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செய்து கொடுத்து இருக்கிறார். குறிப்பாக மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலை மற்றும் அதில் கட்டப்பட்டுள்ள நீண்ட மேம்பாலம், எய்ம்ஸ் மருத்துவமனை, ரூ.1,296 கோடியில் முல்லை பெரியாறு குடிநீர் திட்டம், ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், ரூ.30 கோடியில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம், காளவாசலில் உயர்மட்ட மேம்பாலம், குருவிக்காரன் சாலை, ஓபுளாபடித்துறை, பாண்டி கோவில் ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலம், ரூ.384 கோடியில் வைகை கரையில் நான்குவழிச்சாலை என திட்டங்களை அடுக்கி கொண்டே போகலாம். அதற்கு மதுரை மக்கள் என்றைக்கும் நன்றி உணர்வோடு இருப்பார்கள்.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய ஜெயலலிதாவுக்கு இதே மதுரையில் தான் மக்கள் ஒன்று திரண்டு நன்றியை தெரிவித்தனர். அதேபோல் மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த திட்டங்களுக்கு குடும்பம் குடும்பமாக அ.தி.மு.க. மாநில மாநாட்டில் பங்கேற்று நன்றியை செலுத்த உள்ளனர்.
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. வீர வரலாற்றில், பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்கும்படி ஒரு லட்சம் குடும்பங்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறோம். அப்போது அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறோம். குறிப்பாக இந்த விழிப்புணர்வு பிரசாரம் இளைஞர்கள், தொழிலாளர்கள், படித்தவர்கள், விவசாயிகள், தாய்மார்கள் என அனைத்து மக்களுக்கும் மரக்கன்று வழங்கப்படும். இந்த மரக்கன்றுகள் மூலம் மதுரை பட்டினம் பசுமை பூமியாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.