கள்ளக்குறிச்சி
அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி-உதை; 20 பேனர்கள் கிழிப்பு
|உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி-உதை விழுந்தது. 20 பேனர்கள் கிழிக்கப்பட்டன. பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உளுந்தூர்பேட்டை
போராட்டம்
கள்ளக்குறிச்சியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தி.மு.க.வினர், குமரகுருவை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல்ராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குமரகுரு மீது புகார் அளிப்பதற்காக உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி-உதை
அப்போது உளுந்தூர்பேட்டை நகர அ.தி.மு.க. பொருளாளர் துரை உள்பட 2 பேர் வந்து, தி.மு.க. நிர்வாகிகளை பார்த்து சைகை காண்பித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் அவர்கள் 2 பேரையும் தாக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நகர பொருளாளர் துரையை சரமாரியாக தாக்கி அடித்து, உதைத்தனர். உடனே போலீசார் தலையிட்டு துரையை மீட்டனர்.
20 பேனர்கள் கிழிப்பு
மேலும் உளுந்தூர்பேட்டையில் நேற்று இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக அ.தி.மு.க. சார்பில் 20-க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த பேனர்களை தி.மு.க.வினர் கிழித்து எறிந்தனர்.
இது பற்றி அறிந்ததும் அ.தி.மு.க.வினரும் அங்கு திரண்டு வந்தனர். இதனால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கட்சி நிர்வாகிகளை கலைந்துபோக அறிவுறுத்தினர்.
பதற்றம்; போலீஸ் குவிப்பு
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உளுந்தூர்பேட்டைக்கு விரைந்து வந்து இச்சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜியிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே அவரை கண்டித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், இனியும் இதுபோன்று அவர் பேசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் கூறினார். பின்னர் அவர், தி.மு.க.வினரை கலைந்து போகுமாறு கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் உளுந்தூர்பேட்டையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று இரவு உளுந்தூர்பேட்டையில் நடைபெற இருந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர்.