கடலூர்
அ.தி.மு.க. பிரமுகரின் வங்கி கணக்கில் ரூ.1¼ லட்சம் அபேஸ்
|வடலூரில் அ.தி.மு.க. பிரமுகரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1¼ லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வடலூர்,
ஏ.டி.எம். மையம்
பண்ருட்டி அருகே உள்ள விசூரை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 57). அ.தி.மு.க. பிரமுகர். சம்பவத்தன்று இவர் வடலூருக்கு வந்த போது, அங்கிருந்த ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அங்கிருந்த ஒருவரிடம் பணம் எடுக்க உதவுமாறு குருமூர்த்தி கேட்டுள்ளார்.
அதன்பேரில், அந்த நபர் குருமூர்த்தி கூறிய ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி ரூ. ஆயிரத்தை ஏ.டி.எம்.மில் இருந்து எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் ஏ.டி.எம். கார்டை மாற்றி வேறு ஒரு கார்டை குருமூர்த்தியிடம் அந்த நபர் கொடுத்து அனுப்பிவிட்டார்.
வலைவீச்சு
சிறிது நேரத்துக்கு பின்னர், குருமூர்த்தியின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் பணம் மாயமாகிவிட்டது. அதன்பின்னர் அவருக்கு தனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி மர்ம நபர் பணத்தை அபேஸ் செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, அவர் வடலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி, வலைவீசி தேடி வருகின்றனர்.