பெரம்பலூர்
தொடக்க கல்வி பட்டய பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை
|தொடக்க கல்வி பட்டய பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டய பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு விண்ணப்பிக்க இயலாத நிலையில் இருப்பவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.
பாடாலூர்-வேப்பூர்
பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பாடாலூரில் உள்ள பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் வேப்பூர் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம். இதற்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. ஆகிய பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
31-7-2023 அன்றைய படி எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35 வயதிற்கு மிகாமலும், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவை ஆகியோர் 40 வயதிற்கு மிகாமலும், கலப்பின தம்பதியினர் பொது பிரிவு (பி.சி, பி.சி.எம்., எம்.பி.சி.) 32 வயதிற்கு மிகாமலும், எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. ஆகிய பிரிவினர் 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://scert.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம், என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.