தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்
|நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-ன் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை கல்விக்கட்டணம் செலுத்தும்.
அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (மே) 20-ந் தேதி ஆகும்.
விண்ணப்பப் பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தால், அந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
காஞ்சீபுரத்தில் உள்ள 139 சிறுபான்மையற்ற பள்ளிகளில் 1,889 இடங்கள் இருப்பதாக மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரையில், எவ்வளவு பள்ளிகளில், எவ்வளவு இடங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்? என்பது இன்னும் உறுதியாகவில்லை என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்.