அரியலூர்
விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
|விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இதற்காகவே கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை எட்டி இருந்தாலும் தங்கள் குழந்தைகளை விஜயதசமி தினம் வரும் வரை காத்திருக்க வைப்பது வழக்கமாக உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளின் பெற்றோர் இலைகள் மற்றும் தட்டுகளில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல்லின் மேல் தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' என்ற எழுத்தை எழுதி பழகி கொடுத்தனர். அதன்பின்னர் குழந்தைகள் பள்ளிகளில் உள்ள விளையாட்டு பொருட்களை கொண்டு விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்களுக்கு பாட புத்தகங்களும் வழங்கப்பட்டன. இதேபோல் அரசு அங்கன்வாடிகளிலும் குழந்தைகள் வித்யாரம்பம் எழுத வைத்து பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.