< Back
மாநில செய்திகள்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை
சிவகங்கை
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

தினத்தந்தி
|
15 Jun 2023 6:45 PM GMT

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி விடுதிகளில் 2023-2024-ம் ஆண்டிற்கு சேர விரும்பும் மாணவ-மணவிகள் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி விடுதிகளில் 2023-2024-ம் ஆண்டிற்கு சேர விரும்பும் மாணவ-மணவிகள் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விடுதிகள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 37 பள்ளி மாணவ-மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவ-மாணவிகள் சேரலாம்.

விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தரமான உணவு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளிலும் வழங்கப்படுகிறது. இவ்விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 12-ம் வகுப்பு வரை சீருடைகளும், 10 முதல் 12-ம் வகுப்பு வரை சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும்.

விடுதிகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு பள்ளிக்கும், வீட்டிற்கும் உள்ள தூரம் 5 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கும் பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூரில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது.

விண்ணப்பிக்கலாம்

விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் 85 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 10 சதவீதமும், பிற வகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படுகின்றனர்.

விடுதிகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போட் சைஸ் போட்டோ-3, வங்கிக்கணக்கு புத்தக நகல், சாதிச்சான்று, வருமானச் சான்று, பள்ளி மாற்றுச்சான்று, நன்னடத்தைச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கல்வி நிலையத் தலைவரால் அளிக்கப்படும் படிப்புச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வருகிற 30-ந்தேதி வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் ஒப்படைத்து விட்டு https://tnadw.hms.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்