புதுக்கோட்டை
மாநிலம் முழுவதும் 1 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் சேர்ப்பு-அதிகாரி தகவல்
|மாநிலம் முழுவதும் 1 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பாசிரியர்கள் மற்றும் உடல் இயக்க நிபுணர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கமணி கலந்து கொண்டு பேசுகையில், ''மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தனிநபர் கல்வி திட்டம் மூலம் அவரவர் நிலைக்கேற்ற இலக்கை வடிவமைத்து அவர்களுக்கு சிறப்பு கல்வி அளித்தும், அவர்களின் முன்னேற்றத்தினை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த கல்வி ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 3 ஆயிரம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன் கூட்டியே அடையாளம் காண்பதின் முக்கியத்துவத்தையும், சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வையும், பொதுமக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநிலம் முழுவதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 3-ந் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது'' என்றார். கூட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பாசிரியர்கள் மற்றும் உடல் இயக்க நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோசலை, புள்ளியியல் அலுவலர் உஷா ஆகியோர் செய்திருந்தனர்.