விருதுநகர்
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி
|அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி வருகிற 5-ந் தேதி தொடங்க உள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், வட்டார கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தபடி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வல்லுனர்கள் மற்றும் முதன்மை கருத்தாளர்களால் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வருகிற 5-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி வரை 40 தொகுப்புகளாக மதுரை, நாகமலை புதுக்கோட்டை பில்லர் மையத்தில் நடைபெற உள்ளது.
விடுவிக்க வேண்டும்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மை கருத்தாளர்கள் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள அட்டவணையை பின்பற்றி தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
குறிப்பிடப்பட்ட நாட்களில் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள ஏதுவாக அவர்களை பணியில் இருந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் விடுவிக்க வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் தலைமை ஆசிரியர்களுக்கான தங்குமிடம், உணவு, பயிற்சி நேரம், கொண்டு வர வேண்டிய பொருள் குறித்து தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.