ஐகோர்ட்டில் கார் பந்தயத்துக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு தள்ளிவைப்பு
|சென்னை தீவுத்திடலைச் சுற்றியுள்ள சாலைகளில் பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த திட்டமிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
சென்னை,
சென்னை தீவுத்திடலைச் சுற்றியுள்ள சாலைகளில் பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த திட்டமிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, இந்த பந்தயத்துக்கு ரூ.40 கோடியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இந்த பந்தயம் நடத்துவதால் அரசுக்கு எந்த பலனும் இல்லை. பொதுமக்களுக்கு சிரமத்தை கொடுக்கும் விதமாக இந்த பந்தயத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள், 'பந்தயம் நடத்துவதன் மூலம் எவ்வளவு வருவாய் திரட்டப்படுகிறது? இந்த பந்தயத்தினால் யார் பயனடைகிறார்கள்?' என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில அளித்த அட்வகேட் ஜெனரல், 'கார் பந்தயம் நடத்துவது என அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதை ஐகோர்ட்டு ஆராய முடியாது. அரசு குறைவாகவே செலவிடுகிறது. டிக்கெட் விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. டென்னிஸ் போட்டி போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தவும் அரசு தான் ஏற்பாடு செய்கிறது' என்றார்.
இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்டுள்ளது என்று பந்தயத்தை நடத்தும் தனியார் நிறுவனத்தின் சார்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.