< Back
மாநில செய்திகள்
பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
29 July 2022 1:16 PM GMT

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை 1-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி:

கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.இந்நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

ஜாமீன் மனுக்கள் விசாரணை

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 4 ஆயிரம் மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை கருதியும், 1,000 தொழிலாளர்களின் குடும்ப சூழ்நிலையை கருதியும் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கும்படியும், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் தங்கள் கடமையைத்தான் செய்துள்ளதாகவும், இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்பதால் அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கும்படியும் அவர்கள் 4 பேர் சார்பில் ஆஜரான வக்கீல் ராமச்சந்திரன் வாதிட்டார்.

அதுபோல் பள்ளி முதல்வர் சிவசங்கரன் வயதானவர் என்றும், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளதால் அவருக்கும் ஜாமீன் வழங்கும்படி அவரது சார்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன் வாதிட்டார். உடனே அரசு தரப்பு வக்கீல் சங்கீதா குறுக்கிட்டு, இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தாக்கல் செய்த மனு, சென்னை ஐகோர்ட்டில் இன்று (அதாவது நேற்று) விசாரணை என்பதால் 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்கும்படி வாதிட்டார்.

1-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சாந்தி, இம்மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அவர், தற்போது மனுதாரர்கள் 5 பேரின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களில் சின்னசேலம் போலீஸ் நிலைய குற்ற எண் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்து தாக்கல் செய்திருப்பதால் சி.பி.சி.ஐ.டி. வழக்கு விசாரணையின் குற்ற எண்ணுடன் திருத்தி மனுதாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்