முதன் முறையாக சூரிய கிரகணத்தை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம்
|வானில் நடக்கும் அதிசய நிகழ்வான முழு சூரிய கிரகணம் இன்று இந்தியாவில் தெரியவாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி விண்ணில் செலுத்தியது.
சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லாக்ராஞ்சியன் 1-வது புள்ளி' என்ற இலக்கில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது. அங்கிருந்தபடியே ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனின் வெப்பம், காந்தத் துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து வருகிறது. அத்துடன் சூரியனில் ஏற்படும் காந்த புயல்கள் குறித்தும் இதுஆய்வு செய்து வருகிறது.
இந்தநிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் தன்னுடைய ஆய்வுப்பணிக்கு இடையே இன்று (திங்கட்கிழமை) முதல் முறையாக சூரியகிரகணத்தை ஆய்வு செய்ய உள்ளது. இதுகுறித்து சென்னை பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் லெனின் தமிழ் கோவன் கூறும்போது, 'வானில் நடக்கும் அதிசய நிகழ்வான முழு சூரிய கிரகணம் இன்று (திங்கட்கிழமை) இரவில் வருவதால் இந்தியாவில் தெரியவாய்ப்பு இல்லை' என்றார்.