< Back
மாநில செய்திகள்
ஆடி மாத பிறப்பு:  கோவில்களில் சிறப்பு வழிபாடு;  ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஈரோடு
மாநில செய்திகள்

ஆடி மாத பிறப்பு: கோவில்களில் சிறப்பு வழிபாடு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தினத்தந்தி
|
17 July 2022 8:46 PM GMT

ஆடி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆடி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பண்ணாரி அம்மன் கோவில்

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பண்டிகை நாட்கள், அமாவாசை, பவுர்ணமி நாட்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். இதனால் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் நேற்று ஆடி மாதம் பிறந்தது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இதனால் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்றனர். காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள், 'அம்மா சக்தி தாயே, பண்ணாரி தாயே' என பக்தி கோஷங்கள் எழுப்பி அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்த பக்தர்கள், கோவில் வளாகத்தில் உள்ள குண்டம் உள்ள பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் குண்டத்தில் உள்ள சாம்பலை எடுத்து தங்களுடைய நெற்றியில் விபூதியாக பூசிக்கொண்டார்கள்.

மேலும் பெண் பக்தர்கள் ஏராளமானோர் உப்பையும், மிளகையும் குண்டம் உள்ள பகுதியில் தூவி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். அதுமட்டுமின்றி விளக்கு ஏற்றியும் அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்களுக்கு தனியார் பலர் அன்னதானம் வழங்கினர்.

இதையொட்டி சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோபி

இதேபோல் ஆடி மாதத்தின் முதல் நாளான நேற்று கோபி டவுன் வடக்கு வீதியில் உள்ள பெரம்பலூர் முத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் 50 ரூபாய் நோட்டுகளை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

கொடுமுடி

கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அப்போது சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்து நின்று மகுடேஸ்வரர், வடிவுடைய நாயகி, ஸ்ரீ பிரம்மா, ஆஞ்சநேயர், மகாலட்சுமி, வீரநாராயண பெருமாள், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரகங்களில் உள்ள சாமிகளை வழிபட்டனர். இதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

மேலும் செய்திகள்