நாகப்பட்டினம்
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கறவை மாடுகள்
|தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர் கறவை மாடுகள் வாங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
வெளிப்பாளையம்:
தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர் கறவை மாடுகள் வாங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கறவை மாடு வாங்க மானியம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் தாட்கோ மூலம் கறவை மாடு வாங்க ரூ.7.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மானியம் ரூ.2.25 கோடி ஆகும்.
அதன்படி நாகை மாவட்டத்திற்கு கறவை மாடுகள் வாங்கும் திட்டத்தின் கீழ் 13 ஆதிதிராவிடர்களுக்கு ரூ.1.50 லட்சத்தில் 30 சதவீத மானியம், ரூ.45 ஆயிரம் வீதம் ரூ.3.60 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் ஒருவருக்கு ரூ.45 ஆயிரம் என மொத்தம் 9 பேருக்கு ரூ.4.5 லட்சம் மானியம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம்
இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 18 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராகவும், தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெறாதவராகவும் இருக்க வேண்டும்.
மாடு வாங்குபவரிடமிருந்து மாடுகளின் விலையை வெள்ளைத் தாளில் குறிப்பிட்டு எழுதி வாங்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்படும் திட்டத்தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம். இதில் 45 ஆயிரம் மானியமாக விடுவிக்கப்படும்.
சாதிச்சன்று
சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அரசு கால்நடை டாக்டர் உரிய காப்பீடு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும். ஆதிதிராவிட இனத்தை ேசர்ந்தவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும், பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்கள் http://fast.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை, சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம், திட்ட அறிக்கை, விண்ணப்பங்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் தகவல் அறிய மாவட்ட மேலாளர் அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், நாகை என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.