திருச்சி
ஆதிதிராவிடர், பழங்குடியின விடுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தை உயர்த்த பரிசீலனை; அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேட்டி
|ஆதிதிராவிடர், பழங்குடியின விடுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தை உயர்த்த பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கூறினார்.
விடுதிகள் கட்ட ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பஞ்சப்பூரில் 350 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.19 கோடி மதிப்பீட்டிலும், திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் ராஜா காலனி பகுதியில் 250 கல்லூரி மாணவிகள் தங்கும் வகையில் ரூ.15 கோடி மதிப்பீட்டிலும் விடுதிகள் கட்டப்பட உள்ளன. இந்த விடுதிகள் கட்டும் இடத்தை ஆய்வு செய்ய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நேற்று திருச்சிக்கு வருகை தந்தார். பஞ்சப்பூர் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தையும், திருச்சி ராஜா காலனியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாணவர்களின் விடுதியையும் அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அமைச்சர் கயல்விழி நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.100 கோடியில் விடுதி
முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து பள்ளிகளையும், விடுதிகளையும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தற்போது கல்லூரி மாணவ - மாணவிகளுக்கான விடுதிகள் அதிகமாக தேவைப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த நிதி ஆண்டில் ரூ.100 கோடி மதிப்பிலான விடுதிகள் கட்டப்படும் என அறிவித்திருந்தோம். ஏற்கனவே 3 மாவட்டங்களில் விடுதிகளை ஆய்வு செய்து விட்டோம். திருச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 600 மாணவ-மாணவிகள் தங்கும் வகையில் விடுதிகள் கட்டப்பட உள்ளன. விடுதி அமைய உள்ள இடங்களில் பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்ள, துறை சார்ந்த அதிகாரியுடன் தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.
உணவு மானியம்
மேலும், விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்து, நிதித்துறையுடன் ஏற்கனவே பேசிக்கொண்டிருக்கிறோம். விடுதி மாணவர்களுக்கு நீண்ட காலமாக ஒரே மாதிரியான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலை கொஞ்சம் மாற்றி அமைக்க பரிசீலனை செய்து வருகிறோம். வாச்சாத்தி வழக்கில் தாமதமாக தீர்ப்பு வழங்கப்பட்டாலும் நியாயம் கிடைத்துள்ளது. அந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மிருணாளினி, பழங்குடியினர் நல அலுவலர் கீதா மற்றும் தாட்கோ அதிகாரிகள் உடன் இருந்தனர்.