மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு மதுரை கிளை
|மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை மதுரை மாவட்ட எஸ்.பி. உறுதிப்படுத்த வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வானதையடுத்து முதன்முறையாக அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.
இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் பங்கேற்க வசதியாக மாநாட்டு திடல் அருகே 5 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, மதுரையில் வரும் 20ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு வழங்குவதை மதுரை மாவட்ட எஸ்.பி. உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.