கோடை மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
|கோடை மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் கோடை மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கோடை நடவு மேற்கொள்ளப்படும். அதன்படி இந்த ஆண்டும் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் கோடை நடவாக நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. நெற்கதிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நேரத்தில், கடந்த இரண்டு நாட்களாக சூரைக் காற்றுடன் பெய்த கோடை மழையின் விளைவாக, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வின்னகுடி, குறவடி, நாட்டாபட்டி, சொக்கதேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏக்கர் ஒன்றுக்கு 50 நெல் மூட்டைகள் வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சூறாவளியுடன் பெய்த கோடை மழையின் காரணமாக, ஏக்கர் ஒன்றுக்கு 10 மூட்டைகள் கூட அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதி விவசாயிகள் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளனர்.
எனவே, திமுக அரசு உடனடியாக வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை நேரில் அனுப்பி கள ஆய்வு செய்து, சேதமடைந்த நெல்மணிகளுக்கு உரிய முழு நிவாரணத்தை, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு விரைவில் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.