புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது பொது அமைதியை பாதுகாக்க உரிய வழிகாட்டு விதிமுறைகள்
|புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் உரிய வழிகாட்டு விதிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
நெல்லையைச் சேர்ந்தவர் அய்யா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''தமிழ்நாட்டில் திரையுலக முன்னணி நடிகர்கள் நடித்து திரைப்படங்கள் வெளியாகும்போது தியேட்டர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரசிகர்கள் விழா எடுத்து கொண்டாடுகின்றனர்.
நடிகர்களுக்கு பெரிய அளவில் கட்-அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் ரசிகர்கள் ஈடுபடுவதால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது. எனவே, புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் விதிகளை வகுத்து வரைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
மக்கள் பாதிப்பு
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது திரையரங்குகள் முன்பாக ரசிகர்கள் பெருமளவில் கூடுவது, பட்டாசு வெடிப்பது, பேனர் வைப்பது என அதகளத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர். சில நேரங்களில் ரசிகர்களுக்கிடையே மோதலும் ஏற்படுகிறது. எனவே சிறப்பு காட்சிகளை திரையிடும்போது விதிகளை வகுத்து வரண்முறைப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.
அரசுக்கு கடிதம்
தமிழ்நாடு அரசு தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, "புதிய திரைப்படங்கள் ரிலீஸ், புதிய திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள், ஆடியோ நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி தொடர்பாக நிலையான வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று உள்துறை முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதினேன். அந்த கடித்ததின்படி, விதிமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பி.க்கு, உள்துறை முதன்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்'' என்று கூறி அந்த கடிதத்தை தாக்கல் செய்தார்.
அந்த கடிதத்தை படித்து பார்த்த நீதிபதிகள், தலைமை குற்றவியல் வக்கீல் கூறியதை நாங்கள் பதிவு செய்துக்கொள்கிறோம். புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் உரிய வழிகாட்டு விதிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.