மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
|மழை காரணமாக செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த 6,000 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழக அரசு, ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் முறையாக நெல்மூட்டைகளை பாதுக்காக தவறியதால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் இப்போதைய கோடைக்காலத்தில் பெய்த மழையினால் அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில், செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த 6,000 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
கோடைக்காலத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயம் மழை வரும் என வானிலை ஆய்வு மையமும் செய்தியை வெளியிடுகிறது. அப்படி இருக்கும் போது ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் நெல்மூட்டைகளைப் பாதுகாக்க தார்ப்பாய் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தவறிவிட்டது.
கடந்த காலங்களிலும் கோடைக்காலத்தில் மழை பெய்து நெல் மூட்டைகள் நனைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதே போல மீண்டும் கோடைக்காலத்தில் நெல்மூட்டைகள் நனையக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே தார்ப்பாய் வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து மழை பெய்த பிறகு திடீர் மழை எனக்கூறுவதும், கவனமின்மையால் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தவறுவதும் தமிழக அரசின் செயலற்ற தன்மையாகும்.
தமிழக அரசு மழைக்காலமாக இருந்தாலும் சரி, கோடைக்காலமாக இருந்தாலும் சரி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையங்களுக்கு வரும் நெல் மூட்டைகளை முறையாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் தமிழக அரசு தற்போது மழையால் சேதமடைந்த நெல்மூட்டைகளுக்கு உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுக்கவும், இனிமேல் அரசின் நெல்கொள்முதல் நிலையமோ, ஒழுங்குமுறை விற்பனைக்கூடமோ நெல்மூட்டைகளை உரிய முறையில் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.