அரியலூர்
ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதல் வேண்டும்-பயணிகள் கருத்து
|ரெயில் பயணம் ஒரு சுகமான அனுபவமாகும். அலுப்பு இருக்காது. பாதுகாப்பானது. கட்டணம் குறைவு. எனவே உள்ளூர்வாசிகள் மட்டும் அல்ல, வெளி மாநிலத்தவர்களும் முதலில் தேர்வு செய்வது ரெயில் பயணத்தைத்தான்.
ரெயிலில் முன்பதிவு
பஸ்களில் பல சோதனைகளுக்கு இடையே பயணம் செய்ய பெரும்பாலான பயணிகள் விரும்புவது இல்லை. அதே நேரத்தில் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வது சாதாரண காரியமல்ல. 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முயன்றாலும் குறிப்பிட்ட சில ரெயில்களில் இடம் கிடைப்பது இல்லை.
பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் ரெயில் டிக்கெட்டுகள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது.
சாத்தியம் இல்லை
அவசரமாக பயணம் செய்பவர்கள் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறைகளை நாடிச்செல்கிறார்கள். ஆனால் அவை சாதாரண மக்களுக்கு பொருளாதார ரீதியாக சாத்தியமாவது இல்லை.
எனவே சாதாரண மக்கள் பயணம் செய்யும் வகையில் ரெயில்களில் வசதிகளை மேம்படுத்துவதுடன் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிப்பதே நல்ல தீர்வாக இருக்க முடியும். இதுபற்றி பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
கூட்ட நெரிசல்
அரியலூர் மாவட்டம் ஓட்டகோவில் கிராமத்தை சேர்ந்த கருப்பையா:- கொரோனா சமூக பெருந்தொற்று ஊரடங்கிற்கு பிறகு அரியலூர் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்கள் நின்று செல்லும் சேவை கணிசமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது நின்று செல்லும் விரைவு ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் அதிகமான பயணிகள் மிக சிரமத்தோடு பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனை தவிர்க்கும் விதமாக கூடுதல் பெட்டிகள் இணைத்தால் மகிழ்ச்சி அடைவோம். மேலும், பயணிகளின் கூட்ட நெரிசலையும் தவிர்த்து அதிக பயணிகளையும் கையாள முடியும். ரெயில்வே நிர்வாகம் கணிசமான வருவாயை ஈட்ட முடியும். குறிப்பாக குருவாயூர் விரைவு ரெயிலில் 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை தற்போது அகற்றப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரெயில் கட்டணம் குறைவு
தா.பழூர், சிந்தாமணி பகுதியை சேர்ந்த புருஷோத்தமன்:- வழக்கமாக முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு ரெயிலில் பயணம் செய்வதற்காக என்ஜின் பகுதியில் ஒரு பெட்டியும், கடைசியில் ஒரு பெட்டி மட்டுமே உள்ளது. ரெயில் தனது பயணத்தை தொடங்கும் நிலையத்திலேயே ஏராளமான பயணிகள் ஏறிவிடுகிறார்கள். மேலும் நடக்கும் பாதையிலும் கூட பயணிகள் அமர்ந்து விடுகின்றனர். இதனால் மற்ற ரெயில் நிலையங்களில் ஏறும் பயணிகள் ஒற்றை காலில் நின்று கொண்டு பயணம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் மிகவும் குறைவாக உள்ளதால் ரெயிலில் எப்போதும் கூட்டம் அலைமோதும். எனவே ரெயில் பயணிகளின் நலனை கருதி கூடுதலாக முன்பதிவில்லா பெட்டிகளை இணைப்பதின் மூலம் ரெயில்களில் கூட்ட நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.
சேவை மனப்பான்மையுடன்...
அரியலூர் சேர்ந்த வக்கீல் சாந்தி:- பாதுகாப்பான பயணத்திற்கு ரெயில் போக்குவரத்தை விரும்பி பலரும் செல்கின்றனர். வசதி படைத்தவர்கள் சொகுசாக பயணம் செய்ய குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்கிறார்கள். முதியவர்கள், பெண்கள், குழந்தைகளுடன் பாதுகாப்பாக வெளியூர் சென்றுவர ரெயில் போக்குவரத்தையே விரும்புகிறார்கள். அதேபோல் மருத்துவ சிகிச்சைக்காக செல்பவர்கள் மற்றும் சிறுநீரக பாதிப்புள்ள நோயாளிகள் இயற்கை உபாதையை கழிக்க ரெயிலில் உள்ள கழிவறையை பயன்படுத்துகிறார்கள். மேலும், பஸ் கட்டணத்தைவிட முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்ய கட்டணம் மிகவும் குறைவு என்பதால் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தநிலையில், முன்பதிவு இல்லாத பெட்டிகளை ரெயில்வே நிர்வாகம் குறைத்து வருவதால் அதில் பயணம் செய்யும் பயணிகள் முண்டியடித்தபடியும், கூட்ட நெரிசலில் சிக்கி பயணம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. குறிப்பாக தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே ரெயில்வே நிர்வாகம் லாப நோக்கத்துடன் செயல்படாமல் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு பயணிகள் மத்தியில் நற்பெயரை வாங்க வேண்டும். மேலும், முன்பதிவு செய்யாத பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்.
பிளாட்பாரத்தின் நீளம்
தெற்கு ரெயில்வே துறை முன்னாள் அதிகாரி சி.கே.சிவராஜ் கூறியதாவது:-
ரெயில் நிலைய பிளாட்பாரத்தின் நீளத்திற்கு ஏற்ப 19 பெட்டிகள் கொண்ட ரெயில்தான் இயக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் பிளாட்பாரங்களின் நீளமும், லூப் லைன் என்ற பிளாட்பாரம் அருகில் உள்ள மற்றொரு ரெயில் பாதையின் நீளமும் அதிகரிக்கப்பட்டு தற்போது 22 பெட்டிகள் அதாவது, 21 பெட்டிகளும், 1 என்ஜினும் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்களில் பாமரமக்கள் பயணம் செய்வதற்காக முன்பதிவு இல்லாத பெட்டிகள் 2-க்கு பதிலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகளில் 3 பெட்டிகள் குறைக்கப்பட்டு 2 பெட்டிகள் பி-3, பி-4 என்ற பெயரில் குளிர்சாதன வசதி கொண்ட உயர்தர பெட்டியாக மாற்றப்பட்டு உள்ளன. கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டுமானால் பிளாட்பாரத்தின் நீளமும், லூப் லைன் நீளத்தையும் அதிகரித்தால் மட்டுமே சாத்தியப்படும். பயணிகள் நலன் கருதி ரெயில்கள் பாதுகாப்பான முறையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.