பெரம்பலூர்
மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்
|மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மின்நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு முகாம்கள்
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின் நுகர்வோர்களுக்கு உத்தரவிட்டது. மேலும் அதற்காக தமிழகம் முழுவதும் மின் வாரியம் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக அருகே உள்ள அலுவலகங்களிலும், மாவட்டத்தில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் கடந்த 28-ந்தேதி முதல் நடந்து வருகிறது.
முகாமில் மின்வாரிய அலுவலர்கள் இணையம் மூலம் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாயம் ஆகிய மின் நுகர்வோர்களுக்கு மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.
கூட்டம் அலைமோதல்
இதனால் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் மின் நுகர்வோர்களின் கூட்டம் அலைமோதுகிறது. மின் நுகர்வோர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர். வருகிற 31-ந்தேதி வரை பண்டிகை தினங்களை தவிர ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வருகிற 31-ந்தேதி வரை ஏற்கனவே உள்ள நடைமுறையின் படி எவ்வித சிரமம் இன்றி மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்தலாம். மின் இணைப்பு எண், ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் வீடுகளுக்கு வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை. குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புக்கான இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கான மானியமும் தொடர்ந்து வழங்கப்படும். எனவே வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
வாரிசு சான்றிதழ்
இதுகுறித்து திருவள்ளுவர் உழவர் மன்ற தலைவர் பூலாம்பாடி வரதராசன் கூறுகையில், மின் நுகர்வோர்களில் பெரும்பாலனோர் தங்களது முன்னோர்களின் பெயர்களில் மின் இணைப்பு எண்ணை பயன்பாட்டில் வைத்துள்ளனர். எனவே முன்னோர்களுக்கு இறப்பு சான்றிதழ் மற்றும் தற்போது மின் இணைப்பு பயன்படுத்துவோர் தங்களுக்கு வாரிசு சான்றிதழ் பெற்று, மின் இணைப்பு எண்ணை தங்களது பெயருக்கு மாற்றி, பின்னர் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணுடன் இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்நுகர்வோர்களின் கோரிக்கையாக உள்ளது, என்றார்.