கடலூர்
வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
|வீரமுடையாநத்தம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
சேத்தியாத்தோப்பு,
புவனகிரி ஒன்றியம் வீரமுடையாநத்தம் ஊராட்சியில் கடலூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆய்வு மேற்கொண்டார். இதில் அங்கு சுமார் 34 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டிட பணியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த ஊராட்சி மன்ற தலைவர் பாரியிடம், பணியை நல்ல தரத்துடன் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளை பார்வையிட்டார்.
இதையடுத்து அங்கு புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை பணியை அவர் பார்வையிட்டார்.
விரைந்து முடிக்க வேண்டும்
அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், பயணிகள் நிழற்குடை கட்டும் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரராகவன், முருகன், உதவி பொறியாளர் பூவராகவன், பணி மேற்பார்வையாளர் குணசேகரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வராசு ஆகியோர் உடன் இருந்தனர்.