சிவகங்கை
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட வருவாய் நிர்வாக கூடுதல் தலைமை செயலாளர்
|கீழடி அருங்காட்சியகத்தை வருவாய் நிர்வாக கூடுதல் தலைமை செயலாளர் பார்வையிட்டார்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தில் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்கள் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. நேற்று கீழடி அருங்காட்சியகத்தை வருவாய் நிர்வாக கூடுதல் தலைமை செயலாளரும், ஆணையருமான பிரபாகர் தனது மனைவியுடன் நேரில் பார்வையிட வந்தார். அவரை கீழடி தொல்லியல் பிரிவின் இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் அலுவலர் அஜய் ஆகியோர் வரவேற்றனர். பின்பு அருங்காட்சியகம் முழுவதையும் அவர்கள் பார்வையிட்டனர். வருவாய் நிர்வாக கூடுதல் தலைமை செயலாளருக்கு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றி விரிவாக விளக்கி கூறப்பட்டது.
பின்பு அவர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொடுதிரையில் தனது பெயரை தமிழில் எழுதியவுடன், அது 2600 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தமிழ் பிராமி எழுத்துகளின் வடிவத்தை காட்டியது. வருவாய் நிர்வாக கூடுதல் தலைமை செயலாளரும் ஆணையருமான பிரபாகருடன் திருப்புவனம் தாசில்தார் (பொறுப்பு) உமாமகேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியர் ராமநாதன், வருவாய் ஆய்வாளர் வசந்தி, கீழடி கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் வந்திருந்தனர்.