திருப்பத்தூர்
புதிய கலெக்டர் அலுவலக கட்டிட பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
|திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டிட பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் ரூ.110 கோடி மதிப்பீட்டில் 7 அடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டு, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. அதனை வருகிற 21-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேகமாக நடந்து வருகிறது.
இந்தநிலையில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் (பொதுப்பணித்துறை) தயானந்த கட்டாரியா நேற்று கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டிட பணியில் பயன்படுத்தப்படுகிற கட்டுமான பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கலெக்டர் அறை, முக்கிய பிரமுகர்கள் காத்திருப்பு அறைகள், கழிவறைகள் ஆகிய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மீதமுள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஒப்பந்ததாருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த ஆய்வின் போது கலெக்டர் அமர்குஷ்வாஹா, போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், திட்ட இயக்குனர் முத்து, செயற்பொறியாளர் சங்கரலிங்கம், தாசில்தார் சிவபிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முதல்-அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடை அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள டான்போஸ்கோ பள்ளி மைதானத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.