< Back
மாநில செய்திகள்
கழுமங்கலம் கிராமத்திற்கு கூடுதல் பஸ் சேவை
அரியலூர்
மாநில செய்திகள்

கழுமங்கலம் கிராமத்திற்கு கூடுதல் பஸ் சேவை

தினத்தந்தி
|
1 Aug 2022 12:31 AM IST

ஜெயங்கொண்டத்தில் இருந்து உடையார் பாளையம் வழியாக கழுமங்கலம் கிராமத்திற்கு கூடுதல் பஸ் சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், கழுமங்கலம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கழுமங்கலம் கிராமமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கழுமங்கலம் கிராமத்தில் புறநகர் கூடுதல் பஸ் சேவையினை அமைச்சர் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டத்தில் மாலை 4 மணியளவில் இந்த பஸ் புறப்பட்டு உடையார் பாளையம் வழியாக சென்று கழுமங்கலத்திற்கு மாலை 5 மணிக்கு வந்தடையும். பின்னர் அந்த பஸ் 5 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு உடையார் பாளையம் வழியாக சென்று ஜெயங்கொண்டத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றடையும். இதையடுத்து, கழுமங்கலம் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தேசிய ஊரக நலக்குழுமம் நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நலவாழ்வு மையத்தின் துணை சுகாதார நிலைய கட்டிடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கழுமங்கலம் முதல் பிலாக்குறிச்சி வரை ரூ.49.700 லட்சம் மதிப்பீட்டில் 1.200 கி.மீ. நீளத்திற்கு புதிய தார் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார். இந்தமனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்தநிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன், பொது மேலாளர் சக்திவேல், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்