கள்ளக்குறிச்சி
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி
|கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல கூடுதல் பஸ் வசதியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சிறுவங்கூர் சமத்துவபுரம் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி இல்லாத காரணத்தால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இதை தவிர்க்க கூடுதல் பஸ்வசதி கேட்டு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கூடுதல் பஸ்வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம்.கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல கூடுதல் பஸ் வசதியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
15 நிமிடங்களுக்கு ஒரு பஸ்
இதன் மூலம் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 15 நிமிடங்களுக்கு ஒரு பஸ் வசதி என்கிற வகையில் சிறுவங்கூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வழியாக பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட பொது மேலாளர் (பொறுப்பு) செந்தில், துணை மேலாளர் (வணிகம்) துரைசாமி, கிளை மேலாளர்-1 முருகன், கிளை மேலாளர்-2 சிவசங்கர், நகர மன்ற தலைவர் சுப்ராயலு, ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் மற்றும் தொ.மு.ச. நிர்வாகிகள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.